D
45 இந்தியர்களின் உடல்களை ஏற்றிக்கொண்டு குவைத்திலிருந்து சிறப்பு விமானம் புறப்பட்டது.
குவைத்தின் மங்காப் நகரில் புதன்கிழமை (ஜூன் 12) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சிறப்பு விமானமான சி-130ஜே இந்தியா புறப்பட்டது.
அதிகபட்சமாக 23 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், காலை 11 மணியளவில் இது கேரளாவின் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும். அதன் பிறகு அந்த விமானம் டெல்லிக்கு வரும்.
உயிரிழந்த மற்ற 22 பேரில் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர், ஆந்திரப் பிரதேசம், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தலா 3 பேர், பீகார், ஒடிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர். மற்றொருவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
விபத்துக்குப் பிறகு, இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் குவைத் சென்றிருந்தார். காயமடைந்த இந்தியர்கள் சிகிச்சை பெற்று வரும் ஐந்து மருத்துவமனைகளை அவர்கள் பார்வையிட்டனர்.
இறந்தவர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்ட அதே விமானத்தில் இன்று கீர்த்திவர்தன் சிங் திரும்புகிறார்.
ஜூன் 12 அன்று, குவைத்தின் மங்காப் நகரில் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்தனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் 48 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது, அதில் 45 பேர் இந்தியர்கள் என்றும், 3 பேர் பிலிப்பைன்ஸை சேர்ந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டது.