D
விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் வாக்குரிமையை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்களின் போது தடுப்பு காவலில் உள்ள கைதிகள் வாக்களிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் எனவும் இது தொடர்பிலான வழிகாட்டல்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றில் இது தொடர்பிலான மனு நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான வழிகாட்டல்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கைதிகளின் உரிமைகளுக்காக சுதேஷ் நந்திமால் டி சில்வா என்பவரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்தின் அடிப்படையில் அனைத்து கைதிகளும் மனிதர்கள் என கருதப்பட வேண்டும் எனவும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்பு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எந்த ஒரு நபரும் நீதிமன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரையில் அவர் குற்றமற்றவர் என கருதப்பட வேண்டும் எனவும் அவருக்கு அரசியல் அமைப்பின் பிரகாரம் அனைத்து அடிப்படை உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பின் 89 ஆம் சரத்தின் பிரகாரம் வாக்களிப்பதற்கு பொருத்தமான மற்றும் பொருத்தமற்ற கைதிகள் யார் என்பதை வகைப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் இதுவரையில் கைதிகள் வாக்களிப்பதற்கு ஓர் பொறிமுறை உருவாக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
வாக்களிப்பதற்கு தகுதியான கைதிகள் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு வழிகாட்டல்களை வெளியிட வேண்டும் என மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.