D
சட்டவிரோத கடற்றொழிலினால் ஆமைகள் உள்ளிட்ட கடல் வாழ் பாலூட்டிகளின் உயிர்கள் பெரும் ஆபத்தில் உள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது, அதிநவீன சட்டவிரோத யுக்திகளை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதன் காரணமாக ஆமைகள், டொல்பின்கள் போன்ற விலங்குகளின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் மேற்கு கடற்கரை பகுதியில் 10க்கும் மேற்பட்ட ஆமைகளின் உடல்களை வனவிலங்கு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது, இறந்த ஆமைகளில் பெரும்பாலனாவைக்கு சுவாசிப்பதில் சிரமம், ஷெல் வெடிப்பு மற்றும் காயங்களால் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு கால்நடை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், சட்டவிரோதமான முறையில் கடற்றொழிலில் ஈடுபடுவதால் கடற்றொழில் துறையும் சுற்றுலாத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்படும் என வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் மேற்குப் பிராந்திய கால்நடை வைத்தியர் சுஹதா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.