D
தனியார் வாகன இறக்குமதி மீதான தடையை நீக்கும் தீர்மானத்தை, அரசாங்கம் அடுத்த வருட ஆரம்பம் வரை ஒத்திவைத்துள்ளது என திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் போதுமான அளவு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. அத்துடன் வாகன இறக்குமதியை எளிதாக்குவதற்கு அந்நிய கையிருப்பு போதுமான அளவில் இல்லை.
எனவேதான் வாகன இறக்குமதித் தடையை நீக்குவதை, பின்தள்ளிவைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 1 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி வெளியேறும்.
எவ்வாறாயினும், வர்த்தக வாகனங்களான பாரவூர்திகள், பேருந்துகள், டிரக்குகள் மற்றும் சுற்றுலாத் துறையில் பயன்படுத்தப்படும் வேன்களின் இறக்குமதி அடுத்த மாதம் ஆரம்பிக்கும் என்று அவர் அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில், தனியார் வாகன இறக்குமதி மீதான தடை நீக்கப்பட்டதும், அரச அமைச்சகங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களும் இறக்குமதி செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சார வாகனங்கள் மற்றும் தனியார் கார்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க அரசு திட்டமிட்டிருந்தது.
அதுவும் தற்போது அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தனியார் வாகன இறக்குமதியில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளே அதிக எண்ணிக்கையில் உள்ளன.
எனினும் பொருளாதாரம் இன்னும் போதுமான அளவு மீட்கப்படாததால், இந்த வாகனங்களின் இறக்குமதியை அடுத்த ஆண்டு மே அல்லது ஜூன் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மருத்துவர்கள் மற்றும் மூத்த அரச அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சுமார் 10,000 வாகன அனுமதிப்பத்திரங்கள் இன்னும் நிலுவையில் உள்ளன.
அடுத்த ஆண்டில், இந்த வாகன இறக்குமதிகளையும் அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என்றும், ஆனால் அவர்களின் வாகனங்களும் மொத்தமாக இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படாது என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.