D
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்தில் இருந்து ஜோ பைடன்(Joe Biden) திடீரென்று விலகுவதற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட கட்சியின் முதன்மையான தலைவர்கள் பலர் விலகச் சொல்லியும், கடவுள் நேரிடையாக வந்து தம்மை விலகச் சொல்ல வேண்டும் என்று கூறி வந்த ஜோ பைடன், கடைசி நொடியில் அதிரவைக்கும் அந்த முடிவுவை எடுத்துள்ளதற்கு காரணம், வெற்றி வாய்ப்பு தொடர்பில் அவரிடம் அளிக்கப்பட்ட விரிவான தரவுகளே என தெரிவிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் அந்நாட்டு நேரப்படி மதியம் 1.45 மணிக்கு ஜோ பைடன் தாம் போட்டியிடவில்லை என அறிவிக்கும் 48 மணி நேரம் முன்னர் வரையில், டொனால்ட் ட்ரம்பை தம்மால் தோற்கடிக்க முடியும் என்றே ஜோ பைடன் கூறி வந்துள்ளார்.
நேரலை விவாதத்தில் பதற்றம் அடைந்ததும், பல்வேறு பரப்புரை மேடைகளிலும் தடுமாறிய ஜோ பைடன், நவம்பர் தேர்தலில் தாம் கண்டிப்பாக டொனால்ட் ட்ரம்பை எதிர்கொள்வேன் என அடம் பிடித்து வந்தார்.
ஆனால், கடந்த சனிக்கிழமை அவரிடம் தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் தொடர்பான விரிவான தரவுகள் அளிக்கப்பட, 81 வயது ஜோ பைடன் வேறு வழியின்றி தனது முடிவை மாற்றிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில் உடனடியாக தமக்கு நெருக்கமான வட்டாரத்தை கலந்து பேசிய ஜோ பைடன், ஞாயிறன்று மதியம் 1.45 மணிக்கு தமது முடிவை அமெரிக்க மக்களுக்கு அறிவித்திருந்தார்.
மேலும், ஜோ பைடனுக்கு அளிக்கப்பட்டுள்ள தரவுகளில், 6 முக்கிய மாகாணங்களில் அவர் மிகவும் பின்தங்கியிருந்ததும், வர்ஜீனியா மற்றும் மினசோட்டா மாகாணங்களிலும் நிலை கவலைக்கிடம் என்றும் கூறப்பட்டது.
ஆனால் கோவிட் பாதிப்பால், தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஜோ பைடன், உடனடியாக அரசியல் சூழலை புரிந்துகொண்டு, விலகும் முடிவுக்கு வந்துள்ளார் என்றே கூறப்படுகிறது.