D
கொழும்பு- வார்ட் பிளேஸில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த நபரின் கொலை தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்த கொலை தொடர்பான பொலிஸாரின் விசாரணைகளின் போது மற்றுமொரு முச்சக்கரவண்டியில் வந்த இருவரே இக்கொலையை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், பின் இருக்கைக்கு அருகில் அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் முச்சக்கரவண்டியின் பக்கவாட்டு கண்ணாடி ஒன்றும் உடைந்து வீதியில் கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கமராக்களை பொலிஸார் சோதனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை படுகொலை செய்யப்பட்டவர் கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான சமிந்த குமார என தெரியவந்துள்ளது.
அவர் அதுருகிரிய பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பகலில் அலுமினியம் தொடர்பான வேலையில் ஈடுபட்டு வந்ததுடன், இரவில் வாடகை முச்சக்கரவண்டி ஓட்டுநராக பணிபுரிந்துள்ளார்.
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் கொலைசெய்யப்பட்ட நபரின் மார்பிலும் கழுத்திலும் இரண்டு காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பின்னர் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் உட்பட பல பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று (23) அதிகாலை 1 மணியளவில் கறுவாத்தோட்டம் பொலிஸார் மற்றும் 119க்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் தேசிய பல் வைத்தியசாலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட நபரின் சடலத்தை பொலிஸார் மீட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.