D
நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக நாடாளுமன்றில் நேற்று(25) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“அரசியலமைப்பு பேரவை நிறைவேற்று அதிகாரத்தில் ஒரு பகுதியாகும்.
நிறைவேற்று அதிகாரம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது. அமைச்சரவையில் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளமுடியாது.
அமைச்சரவையில் கலந்துரையாட முடியுமே தவிர தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.
அந்த விடயம் தொடர்பாக 9 பேரினால் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தினை அமைச்சரவையில் பரிசீலிக்க முடியும்.
நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக நாம் கேள்வி எழுப்பவில்லை. ஆனால் அந்த தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவது யார் என்ற கேள்வி எழுகின்றது.
அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் வழங்கப்பட்ட நியமனம் ஒன்றுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எனவே பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பாக அரசியலமைப்பு பேரவையில் மீண்டும் கலந்துரையாடப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.