D
பாரீஸ் நதி நீர் சுத்தம் தொடர்பில் எழுந்த கேள்விகள் காரணமாக, திட்டமிட்டபடி நீச்சல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஓடும் Seine நதி நீரை கடந்த மாத இறுதியில் ஆய்வகத்தில் பரிசோதித்ததில், மனிதக்கழிவில் காணப்படும் இரண்டுவகை கிருமிகள் நதி நீரில் அதிக அளவில் இருப்பது தெரியவந்தது.
ஆகவே, அந்த நதி நீரில் நீச்சல் போட்டிகள் நடத்துவது நீச்சல் வீரர் வீராங்கனைகளின் உடல் நலத்தை பாதிக்கலாம் என்ற கருத்து எழுந்தது.
அதைத் தொடர்ந்து, நதி நீர் சுத்தமாகத்தான் உள்ளது என்பதை நிரூபிப்பதற்காக பாரீஸ் மேயரான Anne Hidalgo Seine நதியில் நீந்தினார்.
ஆனால், நதி நீரின் தரம் தரம் திருப்திகரமாக இல்லாததால், இரண்டு முறை நீச்சல் பயிற்சிகளை ஒலிம்பிக் அமைப்பாளர்கள் ஒத்திவைத்தார்கள். மீண்டும் நதி நீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், இன்று அதிகாலை 3.20 மணிக்கு கிடைத்த பரிசோதனை முடிவுகள், நீரின் தரம் நீச்சல் போட்டிகளை நடத்த தகுதியானதாக உள்ளதாக தெரிவித்துள்ளன.
ஒரு கட்டத்தில், நீச்சல், சைக்கிள் பந்தயம் மற்றும் ஓட்டப்பந்தயம் என மூன்று அம்சங்கள் கொண்ட ட்ரையத்லான் போட்டிகளை, நதி நீர் சுத்தம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக, நீச்சலை விட்டு விட்டு, சைக்கிள் பந்தயம் மற்றும் ஓட்டப்பந்தயம் ஆகியவை மட்டுமே கொண்ட டூயத்லானாக ஆக்கிவிடலாமா என கூட போட்டி அமைப்பாளர்கள் யோசித்திருந்தார்கள்.
ஆனால், தற்போது நதி நீர் நீச்சல் போட்டிகளை நடத்துவதற்கு தகுதியுடையதாக இருப்பதாக ஆய்வகப் பரிசோதனைகள் தெரிவித்துள்ளதால், ட்ரையத்லான் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்கும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.