Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

தமிழர்களின் கோரிக்கைகளை அங்கீகரிக்க வைக்கவே பகிஷ்கரிப்பு ஆயுதம் : செல்வராஜா கஜேந்திரன்

0 1

இந்தத் தேர்தலிலே தமிழர்களுடைய வாக்குகளை பெற்றுக் கொள்ள விரும்புகின்ற, வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களிடத்தில் தமிழர்களுடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழலை உருவாக்குவதற்கு பகிஷ்கரிப்பு என்ற ஆயுதத்தை நாங்கள் கையில் எடுத்திருக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் (Selvarasa Kajendren) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் (Jaffna) – கொக்குவில் பகுதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பகிஷ்கரிப்பு என்ற முயற்சியை முழுமையாக தோற்கடித்து, தமிழர்களை ஏதோ ஒரு வகையில் இந்த தேர்தலில் வாக்களிக்க செய்வதற்கான முயற்சிகளில் பலதரப்பினர் ஈடுபட்டு இருக்கின்றார்கள்.

அதிலே ஒரு சாரார் நேரடியாக பேரினவாத வேட்பாளர்களுக்கு வாக்குகளை பெற்றுக் கொடுப்பதிலும், இன்னுமொரு சாரார் தமிழ் பொது வேட்பாளர் என்ற பெயரிலே தமிழர்களுடைய வாக்குகளை குறிப்பிட்ட நபருக்கு திரட்டி கொடுக்கும் நோக்கத்தோடும் முயற்சிகளில் இறங்கி இருக்கின்றார்கள்.

அந்தவகையில் சிவில் அமைப்புகளும், கட்சிகளும் இணைந்து பொது கட்டமைப்பு என்ற பெயரிலே பொது வேட்பாளர் ஒருவரை தாங்கள் அறிமுகப்படுத்திருப்பதாக அறிவித்திருக்கின்றார்கள்.

தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரனுடைய பெயர் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்தை நாங்கள் அடியோடு நிராகரிக்கின்றோம்.

இவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே எந்த விதமான சம்பந்தமும் கிடையாது.

இதிலே ஒரு சில தரப்புகள் தம்மை சிவில் அமைப்புகள் என்று சொல்லிக் கொண்டு, ஒரு சில அரசியல் கட்சிகள் இந்திய நிகழ்ச்சி நிரலிலே, இயங்கிக் கொண்டிருக்கின்ற ஒற்றையாட்சிக்குள் தமிழர்களுடைய அரசியலை முடக்குவதற்காக கடந்த 15 வருடங்களாக செயற்பட்டு கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், தமிழ் மக்களுடைய அபிலாசைகளுக்கு மாறாக செயல்படுகின்ற தரப்புக்கள் ஒன்று கூடி இந்த தமிழ் தேசிய அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கின்ற நோக்கோடு, தமிழர்களை நிரந்தரமாக தோல்வியடைய செய்கின்ற எண்ணத்தோடும் இங்கே ஒரு வேட்பாளரை கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவரை பொது வேட்பாளர் என்று சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்ட தரப்பினருடைய வேட்பாளராக அரியநேத்திரனை அவர்கள் ஏற்றுக்கொள்ளலாமே தவிர, அவரை தமிழ் மக்களுடைய ஒரு பொது வேட்பாளர் என ஏற்றுக்கொள்ள முடியாது” என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.