D
சஜித் பிரேமதாச(sajith premadasa) ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால், ஒரு வருடத்திற்குள் பதவியை விட்டுவிட்டு ஓடிவிடுவார் என சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(sarath fonseka) தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவும்(gotabaya rajapaksa) தாம் முன்னர் கூறியது போன்று இரண்டு வருடங்களின் பின்னர் ஓடிவிட்டார் என அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் பொன்சேகாவின் வெற்றிக்காக கம்பகாவில் நடைபெற்ற முதலாவது பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து பேசிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,
கட்சி சார்பற்ற தலைவர் தேவை என்று கோல்ஃப் மைதானத்தில் போராட்டம் நடந்தது. இப்போது நான் அவர்களை என்னுடன் சேர அழைக்கிறேன். கட்சி அரசியலில் இருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகிறேன். எனவே, கட்சி சார்பற்ற ஒரு தலைவரை நாட்டுக்கு நியமிப்பதற்கான வாய்ப்பு இப்போது மக்களுக்கு கிடைத்துள்ளது.
அதேபோன்று சஜித் பிரேமதாச இந்த நாட்டின் ஜனாதிபதியானால் ஒரு வருடத்தில் ஓடிவிடுவார். இதை நான் பொன் எழுத்துக்களில் சொன்னேன் என்று நீங்கள் அனைவரும் எழுதுங்கள்.
நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை உள்ளது அதைத் தீர்க்கக்கூடிய அறிஞர்கள், புத்திஜீவிகள் இருந்தாலும் அவர்களை வழிநடத்தும் நல்ல தலைமை இல்லை. இந்நாட்டின் வருமானத்தைப் பெருக்கி மக்களின் கைகளை வளப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அவற்றைச் செய்வதற்கு எங்களிடம் பணி உத்தரவு உள்ளது. அதனால்தான் என்னுடன் சேர மக்களை அழைக்கிறேன் என தெரிவித்தார்.
இதேவேளை வெடிகுண்டு தாக்கப்பட்ட காரையும் சரத் பொன்சேகா தனது பேரணிக்கு கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .