Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

இந்திய – இலங்கை தரைவழிப்பாதை குறித்து கவலை வெளியிட்டுள்ள மல்வத்த மகாநாயக்கர்

0 0

இந்தியாவுக்கும் இடையிலான உத்தேச இணைப்பு வீதி நிர்மாணிக்கப்படும் போது, ஏற்படும் பாதுகாப்பு கரிசனை தொடர்பில் மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்போடுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் நேற்று(20) மல்வத்த விகாரையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே தேரர், தமது கவலையை வெளியிட்டுள்ளார்.

உத்தேச வீதியின் ஊடாக இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு  இலங்கையில் உற்பத்திகள் எதுவும் இல்லை ஆனால் பெருமளவிலான கேரள கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் நாட்டிற்குள் கடத்தப்படும் அச்சுறுத்தலை  இலங்கை எதிர்கொள்ளும் எனவும் சுமங்கல தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த திட்டம் விரைந்து நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எனவும், திட்டத்தின் திட்டமிடல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களுக்கு குறைந்தது இரண்டு வருடங்கள் செல்லும் எனவும் உயர்ஸ்தானிகர் விளக்கமளித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த திட்டம் இலங்கைக்கு பாதகமானது என்ற தவறான கருத்தையும் அவர் மறுத்துள்ளார்.

இதேவேளை, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதா என தேரர் எழுப்பிய கேள்விக்கு, திட்டம் தற்போது பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் எப்போதும் பிரதான நுழைவாயிலைப் பயன்படுத்த மாட்டார்கள், ஆனால் ரகசிய அணுகலைப் பயன்படுத்துவார்கள் என்பதை அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

மேலும், பௌத்த வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துவதற்கும் மின்சாரம் மற்றும் எரிசக்திக்கான செலவினங்களைக் குறைப்பதற்கும் இந்தியப் பிரதமர் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக உயர்ஸ்தானிகர்  குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர், இலங்கையில் எந்தவொரு ஜனாதிபதி அல்லது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு தனது ஒத்துழைப்பை வழங்க இந்திய அரசாங்கம் தயாராகவே உள்ளது என்று கூறியுள்ளார்.  

Leave A Reply

Your email address will not be published.