D
நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன தொடர்பில் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, சந்தேகநபர்கள் 04 பேரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (20) உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜயவர்தன குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணையத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்கள் ஊடாக முறைப்பாட்டாளர் தொடர்பில் ஆபாசமான மற்றும் பொய்யான தகவல்களைப் பிரசுரித்தமை, விளம்பரம் செய்தல் மற்றும் உதவி செய்தமை போன்ற காரணங்களுக்காக குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் பல முகநூல் பக்கங்களைப் பயன்படுத்தி இந்த குற்றச்செயலை செய்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.