D
ஐ.சி.ஜே என்ற (International Court of Justice) ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட நீதிமன்றம் தெற்கு காசா நகரமான ரஃபாவில் தனது இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு இன்று (24) இஸ்ரேலுக்கு (Israel) உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் இந்த உத்தரவுக்கு இணங்க வாய்ப்பில்லை என்ற நிலையில், அந்த நாட்டின் மீது தனிமைப்படுத்தப்பட்ட அழுத்தம் அதிகரிக்கும் என்று வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
காசாவில் (Gaza) இடம்பெறும் போரில் இஸ்ரேலின் நடத்தை பற்றிய விமர்சனம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ரஃபாவின் நடவடிக்கைகளில், இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்காவும் (America) கூட எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில், மூன்று ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகளின் மற்றுமொரு நீதிமன்ற தலைமை வழக்கு தொடுனர், ஹமாஸ் அதிகாரிகளுக்கும், இஸ்ரேலிய தலைவர்களுக்கும் பிடியாணையை கோரியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், இன்று(24) வெளியான சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு, இஸ்ரேலின் சர்வதேச நிலைப்பாட்டிற்கு ஒரு பின்னடைவாக இருந்தாலும், தமது உத்தரவுகளை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகளின் சர்வதேச நீதிமன்றுக்கு காவல்படை எதுவும் இல்லை.
முன்னதாக அந்த நீதிமன்றம் உக்ரைன் மீதான அதன் முழு அளவிலான படையெடுப்பை நிறுத்துமாறு 2022 இல் ரஷ்யாவுக்கு (Russia) உத்தரவிட்டது. எனினும், ரஷ்யா அதனை புறக்கணித்து விட்டது.
இதேவேளை, தாக்குதல்களை நிறுத்துமாறு இன்று இஸ்ரேலுக்கு உத்தரவிட்ட சர்வதேச நீதிமன்றம், அவசரமாகத் தேவைப்படும் அடிப்படை சேவைகள் மற்றும் மனிதாபிமான உதவிகள் தடையின்றி கிடைப்பதற்காக, எகிப்துக்குள் ரஃபா கடந்து செல்லும் பாதையை திறந்து வைக்குமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபையால் அனுப்பப்படும் எந்தவொரு உண்மையைக் கண்டறியும் அல்லது விசாரணைப் பணிக்கான அணுகலை இஸ்ரேல் உறுதி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலின் பிரதமர் மற்றும் ஹமாஸ் தலைவர் ஆகியோர் கைது பிடியாணைகளை பிறப்பித்தாலும், இஸ்ரேல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்பினர் இல்லையென்பதால், நெதன்யாகு மீது உடனடியாக வழக்குத் தொடரும் ஆபத்துக்கள் இல்லை என கூறப்படுகின்றது.
இருப்பினும், கைது அச்சுறுத்தல் காரணமாக இஸ்ரேலிய தலைவர்களுக்கு வெளிநாடுகளுக்கு செல்வதில் கடினநிலை ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.