D
வவுனியா (Vavuniya) வைத்தியசாலையில் பிறந்து மரணித்த சிசுவின் உடலை உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ள தாமதம் ஏற்பட்டுள்ளதாக சிசுவின் தந்தை நேற்று (22) கவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 17ஆம் திகதி வவுனியா – செட்டிகுளம், பிரமனாலங்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயது யுவதி ஒருவர் பிரசவத்திற்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 20ஆம் திகதி அதிகாலை அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டு சிசுவை எடுத்துள்ள போது சிசு உயிரிழந்துள்ளது.
இதனை தொடர்ந்து, வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்களின் அசமந்த போக்கே தமது சிசு மரணமடையக் காரணம் என தந்தை வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதனையடுத்து, நேற்று முன்தினம் (21.08) மாலை வவுனியா மாவட்ட நீதிபதி சிசுவின் உடலை பார்வையிட்டதுடன், தந்தையின் வாக்குமூலங்களையும் பெற்றிருந்தார்.
இந்நிலையில், நேற்று யாழ். (Jaffna) வைத்தியசாலையில் கடமையாற்றும் விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் சடலத்தை ஒப்படைத்து விசாரணைகளை முன்னெடுக்க வவுனியா நீதிமன்று உத்தரவிட்டது.
எனினும், குறித்த சிசுவின் உடலை கொண்டு செல்ல வவுனியா வைத்தியசாலையினர் நோயாளர் காவு வண்டியையோ அல்லது வேறு வாகனத்தையோ கொடுக்க மறுத்துள்ளதால் சிசுவின் உடல் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவில்லை.
பெற்றோர் அதனை தாம் கொண்டு செல்ல முடியாது எனவும் வைத்தியசாலையின் தவறுக்கு அவர்களே கொண்டு செல்ல வேண்டும் எனத் தெரிவித்து சிசுவின் சடலத்தை பொறுப்பேற்கவில்லை.
இதனால் பிறந்து ஒரு நாள் கூட மண்ணில் வாழாத சிசு மரணித்த பின் இரண்டாவது நாளாகவும் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் உள்ளமை குறித்து பெற்றோர் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.