D
மத்துகம தம்பரட்டியவில் உள்ள ஓய்வுபெற்ற சிறிலங்கா இராணுவ மேஜர் ஒருவரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளை காவல்துறையினர் கைப்பற்றியதாக கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அந்த வீட்டில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 22 ரக துப்பாக்கி தோட்டாக்கள் 125 மற்றும் 9 மி.மீ ரக துப்பாக்கி தோட்டாக்கள் 125 ஐ காவல்துறையினர் கைப்பற்றினர்.
துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய, மத்துகம தம்பரடிய கமிட்டியின் ஓய்வுபெற்ற இராணுவ மேஜரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, வீட்டின் அலுமாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த உயிருள்ள தோட்டாக்களை கண்டுபிடிக்க முடிந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை அதிகாரிகள் வீட்டை சோதனையிட்ட போது ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் வீட்டில் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் லக்கி ரந்தெனியவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.