D
நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசிய கருத்துக்கு நகைச்சுவையை பகைச்சுவையாக்க வேண்டாம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ” திமுகவில் உள்ள பழைய தலைவர்களை முதலமைச்சர் சிறப்பாக சமாளித்து வருகிறார். அதிலும், துரைமுருகன் என ஒருவர் இருக்கிறார்.
அவர் கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். ஒரு விடயத்தை செய்து எப்படி இருக்கிறது என கேட்டால் சந்தோஷம் என்று கூறுவார். நல்லா இருக்கிறது என்பதற்காக சந்தோசம் என்று சொல்கிறாரா? ஏண்டா இப்படி செய்கிறீர்கள் என்பதற்காக சந்தோசம் என்று சொல்கிறாரா? என்று புரியாது” என்றார்.
இவரின் கருத்துக்கு அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி, தாடி வளர்ந்து, சாகுற நிலையில் உள்ளவர்கள், வயதானவர்கள் அனைவரும் நடிக்கின்றனர். இதனால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. அதை மறந்துட்டு ரஜினிகாந்த் பேசுகிறார்” என்றார்.
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் பேசுகையில், “துரைமுருகன் என்னுடைய நண்பர். எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு எப்போதும் தொடரும். அவர் என்ன சொல்லி இருந்தாலும் எனக்கு வருத்தம் கிடையாது.
அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று கூறினார். இந்நிலையில், ரஜினிகாந்தின் பேச்சை தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், “நானும் ரஜினியும் எப்போதும் போல் நண்பர்களாக இருப்போம். நகைச்சுவையை பகைச்சுவையாக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.