D
கண்டவன், நிண்டவன், வருபவன், செல்பவன் எல்லாம் தமிழ் மக்களை ஏமாற்ற தமிழ் இனம் அறிவற்ற மந்தைக் கூட்டங்களா? அல்லது சபிக்கப்பட்ட மக்கள் கூட்டமா? ஈழத் தமிழர்கள் தமது அரசியலை தாமே அறிவார்ந்த ரீதியில் நுண்மான் நுழைபுலத்தோடு முன்னெடுக்க முற்பட்டு விட்டனர்.
இதுவரை காலமும் தமிழ் அறிஞர் குழாத்தின் கருத்தியல் அரசியல் மயப்படுத்தப்படாமல் செயலுருவத்திற்கு செல்லாமல் இருந்த நிலை மாறி இப்போது அரங்கத்திற்குவரத் தொடங்கியுள்ளது.
வரலாற்றிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு அறிவியல் சமூகத்தின் வழிகாட்டலில் அரசியல் செயற்படத் தொடங்கிவிட் டது. அதனை இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தி தமிழினம் எதிர்கொள்ள துணிந்து விட்டது.
பல்வேறு தடைகளைத் தாண்டி தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு பெருகத் தொடங்கிவிட்டது.
ஈழத் தமிழினத்தின் வரலாற்றில் 1621ல் போர்த்துக்கேரிடம் நல்லூர் ராஜ்ஜியத்தின் தளபதி தீருவில்லில் தோல்வியடைந்ததன் பின்னர் மீண்டும் ஒருமுறை வரலாறு காணாத தோல்வியை தமிழர் சேனை முள்ளிவாய்க்காலில் 2009 இல் சந்தித்தது.
இந்த வரலாறு காணாத பெரும் படைப்பல தோல்வியில் இருந்து மீண்டு எழுவது இலகுவான ஒன்று அல்ல. “தோல்வியின் வழியறியாதோன் வெற்றிக்கு வழியறியான்“ என்ற கூற்றுக்கமைய தோல்வியின் வழியைக் கண்டறிந்து வெற்றிக்கான வழியை தேடி அறிவியல் பூர்வமாக உலகளாவிய அரசியல் வரைமுறைகளுக்குள்ளால் தமிழினம் தன்னை தற்காத்துக் கொள்வதற்கான தேசிய கட்டுமானத்தை மீளவும் கட்ட ஆரம்பித்துவிட்டது.
அவ்வாறு ஒரு மீள்நிர்மாணம் செய்வதற்கு ஒரு 15 ஆண்டுகள் ஈழத்தமிழருக்கு தேவைப்பட்டது என்பது ஒரு நீண்ட காலம்தான்.
பொதுவாக விடுதலைக்குப் போராடிய தேசிய இனங்களும் இனக்குழுக்களும் தமது விடுதலைக்கான பயணத்தில் தோல்வியடைந்தால் அந்தத் தோல்வி அந்தச் சமூகத்தின் எல்லா மட்டத்தையும் பாதித்து, சிதைத்து, சீரழிவில் கொண்டுவந்து நிறுத்தும்.
போரின் தோல்வியினால் ஏற்பட்ட வலிகள், வேதனைகள், நம்பிக்கயீனங்கள், போட்டிகள், பொறாமைகள் என்பவற்றினால் எழும் வறண்டவாதத்தால் ஈர்க்கப்பட்ட ஆயிரம் முட்டாள்கள் அந்தச் சமூகத்தில் முன்னிலைக்கு வந்து சமூகத்தின் கருத்து மண்டலத்தை ஆக்கிரமித்து இருப்பார்கள்.
அத்தகைய தோல்வியடைந்த சமூகங்களில் தோல்வியிலிருந்து மீண்டெழுவதற்காக ஆரோக்கியமாக சிந்திக்கும், தீர்க்கதரிசனமான ஒவ்வொரு சிந்தனையாளனுக்கும் எதிராக பல்லாயிரம் கற்கள் வீசப்படும்.
தன் இனத்தை காக்கவும் முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச்செல்லும் சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு நல்வழிகாட்டல்களுக்கும் எதிராக தீவிரமானதும், முட்டாள்தனமானதுமான ஆயிரம் கற்பனைவாத வசை சொற்கள் உதிர்க்கப்படும். அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே கருத்து மண்டலம் உருவாக்கப்பட்டிருக்கும்.
அத்தகைய தோல்வி அடைந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக விவாதப் பொருளாக மாற்றப்பட்டு அக்கப்போர் நிகழ்த்தப்படும்.
அறிவார்ந்த நடைமுறைச் சாத்தியமான சிந்தனைகள் புறந்தள்ளப்பட்டு ரம்யமான நல்லுணர்ச்சி பெறும் வகையிலான போலியான சிந்தனைகளும், கருத்துக்களும், முட்டாள்த்தனங்களும் மேன்மைப்படுத்தப்பட்டு கவர்ச்சிகரமானதாக தோற்றம் பெற்று அவை அச்சமூகத்தின் கருத்து மண்டலத்தை ஆக்கிரமித்து இடம்பிடித்து கோலோச்சும்.
சமூகத்தின் இயங்குதளத்தை ஓடுகாலிகளும், அரசியல் விபச்சாரிகளும், அற்பர்களும் ஆக்கிரமித்திருப்பர். இதுவே கடந்த 15 ஆண்டுகளாக ஈழத் தமிழ் அரசியலின் வேதனை மிகுந்த பக்கங்களாக இருந்தன.
அனைத்துத் தமிழ்த் தலைவர்களும்“அகில இலங்கை” “ஐக்கிய இலங்கை” என்று உச்சரித்தவாறு தமது அரசியல் பயணத்தை அக்கம் பக்கம் திரும்பிப் பார்க்காது முன்னெடுத்து வாளேந்திய சிங்கத்தின் வாய்க்குள் நுழைந்தனர். அனைத்து ஐக்கியங்களும், நல்லெண்ணங்களும், நேசக்கரங்களும் சரணாகதியில் முடிவடைந்தன.
தோல்விக்கான காரணிகளைக் கண்டறிவதில் இருந்தும், தோல்வியடைந்த பாதைகளைக் கைவிடுவதில் இருந்தும் வெற்றிக்கான பயணம் ஆரம்பமாகிறது.
தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்தால், தோல்வியை புகழ்ந்தேற்றி விதைத்தால், விதைக்கப்பட்ட தோல்விகளையே அறுவடை செய்ய நேரும். வெற்றிக்கும், தோல்விக்கும் பொறுப்பேற்பதில் இருந்தே வளர்ச்சிக்கான பாதை உதயமாகிறது.
கற்பனைகளுக்கும், காப்பிய கனவுகளுக்கும் பிரியாவிடை அளித்துவிட்டு யதார்த்தத்தையும், நடைமுறையையும் இறுகத் தழுவிக்கொள்ள வேண்டியது அவசியமானது. அரசியலை மேலெழுந்த வாரியான, எழுமாத்திரமான அணுகுமுறைகளில் இருந்து விடுவித்து நீண்டகாலப் பார்வையேடு மிக ஆழமாக பார்க்க வேண்டியது அவசியம்.
தமிழ்த்தேசியத்தை மீள்கட்டமைப்புச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இச்செயன்முறைக்கு முழுமைப்பட்ட பார்வையும் (On the whole outlook) அனைத்தையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த அணுகுமுறையும் (Holistic Approach) இவற்றின் அடிப்படையில் ஒட்டுமொத்த மூலோபாயமும் (Overall Strategy) வகுக்கப்பட வேண்டியது அவசியமானது.
சமூகத்தின் அரசியல் நடத்தைகள்
தமிழ் சமூகத்தின் சமுதாய நடத்தைகளையோ, அரசியல் செயற்பாடுகளையோ, பண்பாட்டு விழுமியங்களை புரிந்து கொள்வதற்கு சமூகம் சார்ந்திருக்கும் கட்டமைப்பைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஈழத்தமிழினமும் தனக்குரிய கட்டமைப்புப் பகுப்பாய்வவை (structural analysis) வைத்திருக்க வேண்டும். அதனை செயற்பாட்டு அணுகுமுறைக்கு (functional approach ஊடாக நோக்கவும் ஆராயவும் வேண்டும்.
ஒரு சமூகத்தின் தலைவிதியை நிர்ணயிப்பதில் செல்வாக்கு செலுத்துகின்ற, அடிப்படையான பாத்திரம் வகிக்கின்ற கட்டமைப்புக்களாவன. 1)புவியியற் கட்டமைப்பு (Geographical Structure)
2)அரசியற் கட்டமைப்பு (Political Structure)
3)பொருளியற் கட்டமைப்பு (Economic Structure)
4)சமூகக்கட்டமைப்பு (Social Structure)
5)பண்பாட்டுக் கட்டமைப்பு (Cultural Structure) மேற்குறிப்பிடப்பட்டவற்றின் அடித்தளத்தில் இருந்தே சமூகத்தின் அரசியல் நடத்தை விருப்பு – வெறுப்புக்கள் வழிநடத்தப்படுவதை அவற்றுக்குரிய களச்செயற்படு யதார்த்தததிற்கு ஊடாக அணுகி புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
ஆதலால் அரசியலைச் சரிவரப்புரிந்து கொள்வதற்கும், செயற்படுத்துவதற்கும் இத்தகைய கட்டமைப்புப் பகுப்பாய்வும், செயற்பாட்டு அணுகுமுறை ஆய்வுகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
அதேவேளை வரலாற்றை நிர்ணயிப்பதில் மனிதனுக்கென்றும் ஒரு பாத்திரம் உண்டு. அந்தப் பாத்திரம் மனம்போன போக்கில் அமைய முடியாது. காணப்படும் அடிப்படை நிலைமைகளை கையாள்வதன் வாயிலாகவே அவனுக்கான பாத்திரம் அமைகிறது.
நூறாண்டிற்கும் மேற்பட்ட கால தொடர் தோல்விகளைப் பார்க்கும் போது தமிழரின் அரசியல் பார்வையிலும், அணுகுமுறையிலும் பாரதூரமான தவறுகள், பிழைகள் இருப்பது புலனாகிறது.
கடந்தகால தவறான, பிழையான பார்வைக்கு முடிவு கட்டி ஒரு புதிய சிந்தனைக்கும், பார்வைக்கும், செயலுக்கும் செல்லாமல் தமிழினம் வெற்றிப்பாதையை நோக்கி முன்னேற முடியாது.
கடந்த. 15 ஆண்டுகளாக ஜனாதிபதி தேர்தலை தமிழ்மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொர்பாக மிதவாத அரசியல் தலைமைகள் தமது சுயநல அரசியல் நலன்களுக்காக தமிழ் புத்திஜீவிகளின் அறிவார்ந்த ” பொது வேட்பாளர் ” என்ற எண்ணக் கருத்தை தான்தோன்றித் தனமாக எதிர்த்து வந்தனர்.
இந்த ஓடுகாலி அரசியல்வாதிகளைத் தாண்டி பொது வேட்பாளர் என்ற கொள்கை இப்போது தமிழ் மக்கள் மத்தியில் இடம் பிடித்துவிட்டது.
தோல்வி அடைந்த தமிழ் சமூகம் தமை மீண்டெழுவதற்கு களத்தில் என்ன இருக்கின்றதோ அதனைப் பயன்படுத்தியே மீண்டெழ வேண்டும். அந்த அடிப்படையில்தான் இலங்கையின் அரசியல் யாப்புக்குள் இருக்கின்ற ஓட்டைகளையும், சாதகமான பக்கங்களையும் தமிழினம் பயன்படுத்தி முன்னேற வேண்டியது அவசியமாகும்.
இந்த அடிப்படையில்தான் ஜனாதிபதி தேர்தல் மூலம் தமிழ் மக்கள் தம்மை ஒருங்கிணைப்பதற்கும், ஐக்கியப்படுத்துவதற்கும் மீள்நிர்மாணம் செய்வதற்கும், தம்மைத்தாமே புதுப்பித்துக் கொள்வதற்குமான ஒரு வாய்ப்பாக இந்த தேர்தலை தமிழினம் எதிர்கொள்கிறது.
தமிழ் அறிவியல் சமூகத்தினாலும், குடிமக்கள் சமூகத்தினாலும், அரசியல் சமூகத்தினாலும் இணைந்து கூட்டாக கிழக்கு மாகாணத்தின் தீவிர தமிழ் தேசிய செயல்பாட்டாளரான பா.அரியநேத்திரனை முன்நிறுத்தி இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் அவருக்கு கிழக்கு மாகாணத்தில் பெரும் செல்வாக்கு குவியத் தொடங்கிவிட்டது.
அதற்கு ஒரு எடுத்துக்காட்டுத்தான் தமிழரசு கட்சி பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டை எடுக்காமல் காலத்தை தாமதப்படுத்தி கொண்டிருக்கும் நிலையில் நேற்று முன்தினம் திருகோணமலையின் தமிழரசு கட்சியின் மாவட்ட குழு அரியனேத்திரன் அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக ஏகமனதாக முடிவெடுத்து அறிவித்துவிட்டது.
எனினும் தற்போதும் தமிழ் அரசியல் பரப்பிற்குள்ளும் இனத்துக்குள்ளும் கோடாலிக் கம்புகள் தமிழினத்தின் அரசியல் முன்னேற்றகரமான பாதைக்கு தடைகளையும் இடர்களையும் விளைவிக்க தொடங்கிவிட்டனர்.
அவற்றை முறியடித்து முன்னேற வேண்டும். தமிழ் அரசியல் பரப்பிலும் இத்தகைய புல்லுருவிகளும் கோடாலிக் காம்புகளும் ஒத்தோடிகளும் ஏராளம் முளைப்பது இயல்பானதே. இத்தகைய பல இடர்களையும், துரோகங்களையும் தமிழினம் தனது வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்து இருக்கிறது.
அவற்றை முறியடிக்கும் ஆற்றலும் தமிழினத்திற்கு உண்டு. எனவே இவற்றை களையெடுத்து தமிழ் தேசிய அரசியல் தன் இலக்கை நோக்கி பயணிக்கும் போக்கு இப்போது தென்படத் தொடங்கிவிட்டது.
தமிழ் மக்கள் எப்போதும் கொள்கைக்காக வாக்களிப்பவர்கள் அதனை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் இவ்வளவு காலமும் நடைமுறையில் இருந்ததான இனத்துக்கு எதிராக எவன் கூடிய தீங்கை செய்தானோ அவனுக்கு எதிராக வாக்களித்து பழக்கப்பட்ட மக்கள் இப்போது தம் இனத்திற்காக தமக்கான வாக்குகளை தமிழ் பொது வேட்பாளர்களுக்கு அளிப்பார்கள் என்பது திண்ணம்.
சிங்கள தேசியக் கட்சிகளுக்குள் கலந்திருக்கும் டக்ளஸ், அங்கஜன், பிள்ளையான், வியாழேந்திரன் போன்றவர்களுக்கு வாக்களித்தவர்கள் அந்தந்த மாவட்டங்களில் அவரவர் நலன் சார்ந்த நிர்ப்பந்தம் காரணமாகவே வாக்களிக்கிறார்கள்.
ஜனாதிபதி தேர்தல் என்பது மேற்குறிப்பிட்ட தமிழர்களுக்கான வாக்கு அல்ல எனவே ஒரு தமிழன் தேர்தலில் நிற்கின்ற போது தமிழர்கள் தமிழனுக்கே வாக்களிக்கும் பண்பாட்டில் இருந்து ஒருபோதும் மீற மாட்டார்கள் என்ற அடிப்படையில் மேற்குறிப்பிட்ட சிங்கள தேசியக் கட்சிகளுக்குள் ஒன்று கலந்தவர்களுக்கு வாக்களிப்பவர்களும் தமிழ் பொது வேட்பாளரான அரியநேத்திரன் அவர்களுக்கே இந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பர்.
அத்தோடு தேர்தலை பகிஷ்கரிக்க கோரும் கோரிக்கையை தமிழ் மக்கள் பொருட்படுத்தியதாக இல்லை. அவ்வாறே தமிழரசு கட்சிக்குள் இருந்து கொண்டு தமிழ் தேசியம் பேசிக்கொண்டு வாழ்க்கையாலும், வாழ்க்கை முறையாலும், வாழ்விடத்தாலும் சிங்கள தேசத்துடன் இரண்டறக் கலந்த சுமந்திரன், சாணக்கியன் போன்றவர்களுடைய கருத்துக்களும் தமிழ் மக்கள் மத்தியில் அடிபட்டு போய்க் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவர்கள் காணாமல் போவதற்கான வாய்ப்புகளே அதிகரித்துச் செல்கிறது.
இவர்கள் பொது வேட்பாளரான அரியநேத்திரனை மாத்திரம் எதிர்க்கவில்லை. தமிழ் மக்களுடைய தேசியத்தை, தமிழ் மக்களுடைய தேசிய எழுர்ச்சியை, தமிழ் மக்களுடைய ஐக்கியத்தை, தமிழ் மக்களுடைய தேசிய அபிலாசையை இவர்கள் எதிர்க்கிறார்கள்.
ஒட்டு மொத்த தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசையையும் சிங்கள தேசத்திடம் அடகு வைக்க முனைவர்களாகவே இவர்களைத் தமிழ் மக்கள் பார்க்கிறார்கள்.
இந்த அடிப்படையில் எத்தனை எதிர் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், எத்தனை தடைகள் வந்தாலும் தமிழினம் தன்னை மீண்டும் ஒருமுறை தாம் தனித்துவமானவர்கள் என்பதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரியநேத்திரனுக்கு வாக்களித்து நிரூபிப்பர். தம் தேசிய உறுதிப்பாட்டை எதிரிகளுக்கு உணர்த்துவர்.