D
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிதாக தெரிவாகும் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு அமைய நாடாளுமன்ற தேர்தலுக்கான அழைப்பு விடுக்க முடியும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்து 66 நாட்களின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக தெரிவாகும் ஜனாதிபதி தனக்கு பொருத்தமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை என நினைத்தால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும்.
அவ்வாறு நடந்தால் ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் வேட்புமனுக்கள் கோரப்பட்டு 66 நாட்களுக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டியிருக்கும் என ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,482 ஆக அதிகரித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 612 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 870 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.