D
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாடுகளில் கடனை பெற்று நாட்டு வளங்களை அடாத்தாக விற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் எம். எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் உள்ள கட்சி கிளை காரியாலயத்தில் இன்று (31) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
“ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே இருக்கின்ற இந்த நேரத்தில் ஒரு மும்முனைப் போட்டி இருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
ரணில் விக்ரமசிங்கவை பொறுத்தவரை இந்த நாட்டை மீட்டு விட்டேன், வரிசை யுகத்தை நிறுத்திவிட்டேன், பொருள் தட்டுப்பாடுகள் இல்லை போன்ற கானல் நீர் கதைகளை பேசுவதன் மூலம் தானே நிகரில்லா தலைவன் எனும் மாயையை காட்ட முனைகின்றார்.
இந்த நிலைமையை சீர் செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்திடமும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமும் பாகிஸ்தான், பங்களாதேஸ், இந்தியா போன்ற நாடுகளிடமும் அதிக பணத்தை கடனாக பெற்று கடன் சுமையை மேலும் அவர் அதிகரித்துள்ளார்.
கடன் மேல் கடன் படுகின்ற போது, அதனை மீளச் செலுத்த முடியாத ஒரு இக்கட்டான நிலை ஏற்படுவதோடு எமக்கு சொந்தமான அரச நிறுவனங்களை, காணிகளை வெளிநாடுகளுக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படுகிறது.
இவ்வாறே இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், டெலிகொம் போன்ற நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு அடாத்தாக வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன.
இது உண்மையான மாற்றமோ அபிவிருத்தியோ அல்ல. இந்த நாட்டை ஊழல் மோசடிகளால் நாசம் செய்த கொள்ளையர்களையும் இனவாதிகளையும் பாதுகாக்கின்ற ஒரு கூடாரமாகவே ரணிலின் தலைமை காணப்படுகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.