D
வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் மானியங்கள் மூலம் இலங்கையில் மேற்கொள்ளப்படும் பாரிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் நிதித்தொகை, 100,000 அமெரிக்க டொலர்களை தாண்டும் போது, சட்டப்பூர்வமாக இணையங்களில் தகவல்களை வெளியிட வேண்டும் என்ற அறிவுறுத்தல் மீறப்படுவதாக வெரிடே ரிசர்ச் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்த சட்டத்திற்கு இணங்கும் செயற்பாடுகள் மிக மோசமாக உள்ளன என்றும் வெரிடே ரிசர்ச், தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில், அத்தகைய திட்டங்களில் தேவையான 40 சதவீத தகவல்களை மட்டுமே அரசாங்கம் வெளியிட்டதாக வெரிடே ரிசர்ச் குறிப்பிட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு இலங்கையின் முன்னணி பொருளாதார நுண்ணறிவு தளமான PublicFinance.LK இன் 2024 Infrastructure Watch தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது
2022 ஆம் ஆண்டு முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முன்முயற்சியுடன் வெளிப்படுத்தல் தேவைகளை, இலங்கை அரசாங்கம் பின்பற்றுவதை இந்த தளம் கண்காணித்து வருகிறது.
இந்தநிலையில், வெளிநாட்டு நிதியுதவி திட்டங்களுக்கான கொள்முதல் தொடர்பான தகவல்களை வெளியிடுவது இன்னும் குறைவாக இருப்பதாக, குறித்த தளம் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துடன் அரசாங்கத்தின் திட்ட நிதியுதவியை இணைப்பதன் மூலம் வெளிநாட்டு கடன் வழங்குநர்கள் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க முடியும் என்று பொருளாதார நிபுணரும் வெரிட்டே ஆராய்ச்சியின் பணிப்பாளருமான சுபாஷினி அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மேம்படுத்தப்பட்ட வெளிப்படைத்தன்மை இலங்கைப் பொதுமக்களுக்கு மட்டுமன்றி இந்தத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள கடன் வழங்குவோர் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கும் நன்மைகளை வழங்கும் என்று அவர் கூறியுள்ளார்.