D
பௌத்த மதத்தை பாதுகாப்பதோடு ஏனைய மதங்களுக்கும் உரிய அந்தஸ்தை வழங்கி செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பிக்குகள் ஆலோசனை பேரவையின் தேசிய மாநாட்டில் நேற்று கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கிராமங்களிலும் நகரங்களிலும் அமையப் பெற்றுள்ள விகாரைகளிலே இருக்கின்ற மகா சங்கத்தினர் எமது நாட்டின் சமாதானம், சுபீட்சம், அபிவிருத்தி போன்றவற்றிற்காகவும், சிறந்த தார்மீக சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க சேவையை முன்னெடுக்கின்றனர்.
மகா சங்கத்தினருதும் ஏனைய மதத் தலைவர்களினும் ஆலோசனைகளினதும் அறிவுரைகளினதும் ஊடாக அரசாட்சி ஒன்று இடம்பெற வேண்டும்.
இன்று எமது நாடு பலவிதமான சவால்களை எதிர்கொள்கின்றது. கிராமிய அபிவிருத்தி திட்டங்கள் செயலிழந்து மக்களுடைய வாழ்க்கை தரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டிற்கான சவால்கள் வருகின்ற போது வரலாறு நெடுகிலும் மகா சங்கத்தினரே ஆலோசனை வழங்கி இருக்கின்றனர்.
இந்த சந்தர்ப்பத்திலும் மகா சங்கத்தினரின் தேவை மிகவும் முக்கியமாக இருக்கின்றது.
மேலும் எமது நாட்டில் மனிதப் பண்புகள் குறைவடைந்து வருகின்றன. மத தலைமைத்துவங்களின் ஊடாக சிறந்த சமூகத்துக்குள் பிரவேசித்து வீழ்ச்சி அடைந்த நாட்டை அறநெறித் தன்மையுடன் சிறந்த பண்புகளின் பக்கம் விட்டுச் செல்ல வேண்டும்.
அறநெறி கல்வியை மையப்படுத்திய சிறந்த சமூகக் கட்டமைப்புக்கான அடித்தளம் இடப்பட வேண்டும்.
அறநெறி பாடசாலை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் சகல வசதிகளையும் கொண்ட கல்வியை வழங்குகின்ற நிலையமாக மத ஸ்தலங்கள் மாற வேண்டும்.
அத்தோடு விகாரை கட்டமைப்புக்குள் நாட்டிற்கான சிறந்த விடயங்கள் இடம் பெறுவது மழுங்கடிக்கப்பட்டு, மத ஸ்தானங்கள் மூடப்படுகின்றமையினால் அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும்.” என்றார்.