D
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் வார இறுதியில் நாட்டிற்கு விளக்கத்தை முன்வைக்கவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தல் காலத்தில் 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில் சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றில் விடுத்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இது இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் அதன்போது, மதுபான உரிமம் வழங்கும் முறை குறித்து விரிவாக விளக்கப்பட உள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தினால் ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னர் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் பெற்றவர்களின் பட்டியல் கடந்த நான்காம் திகதி வெளியிடப்பட்டது.
அதன்போது, 361 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் 172 பேர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அரசியல் லஞ்சமாக வழங்கப்பட்டவை எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்தார்.
இந்த நிலையில், மதுபான அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் பட்டியலுடன் அவர்களை பரிந்துரைத்த அரசியல்வாதிகளின் பெயர்களையும் வெளியிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரோஹித அபேகுணவர்தன மற்றும் சாணக்கியன் ஆகியோர் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதன்படி, குறித்த விடயம் தொடர்பில் நிதியமைச்சு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாவும், மதுபான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு பரிந்துரை செய்த அரசியல்வாதிகளின் பட்டியலும் விரைவில் வெளியாகும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.