D
எலோன் மஸ்க்கின் (Elon Musk) ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“முன்னதாக, இலங்கையில் தமது இணைய சேவையை தொடங்குவதற்கான விண்ணப்பத்தை எலோன் மஸ்க் அனுப்பியிருந்தார்.
இதனையடுத்து, அதற்கான பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டு, அவை முடிந்தவுடன் மூன்று மாதங்களில் செயற்கைக்கோள் இணைய சேவையை ஆரம்பிக்க முடியும்.
மேலும், ஸ்டார்லிங்க் சேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இலங்கையில் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும்.
அதேவேளை, எலோன் மஸ்க், இலங்கையில் உள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையிலும் ஆர்வமாக உள்ளார்.
அது மாத்திரமன்றி, இணைய சேவை இலங்கைக்கு பாரியளவில் நன்மை பயக்கும். குறிப்பாக இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உதவும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.