D
யாழ்ப்பாணம்(Jaffna), தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியொருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
ஊர்காவற்றுறை – கரம்பன் பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளே இவ்வாறு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக தம்மை தாக்கி சித்திரவதை செய்வதாக மாணவிகள் கண்ணீருடன் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாமை, பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களிற்காகவே அருட்சகோதரி தாக்குதல் நடத்தியதாக மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், தங்கள் மீது தகாத வார்த்தைகளை பிரயோகிப்பதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, ஊர்காவற்றுறை பொலிஸாரால், குறித்த 11 மாணவிகளும் இன்று(28) யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் அவதானிக்கப்பட்டுள்ளதுடன் மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரியை கைது செய்வதற்கான நடவடிக்கையை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.