Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

சொந்த மண்ணில் கார்ல்சனை வீழ்திய பிரக்ஞானந்தா

0 3

நோர்வே நாட்டில் இடம்பெற்றுவரும் செஸ் சம்பியன்ஷிப் தொடரின் பக்கம் இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்தின் கவனம் திரும்பியுள்ளது.

சர்வதேச செஸ் தரப்படுத்தலின் முதன்மை வீரரான கார்ல்சனை இந்திய இளம் வீரரான பிரக்ஞானந்தா வீழ்த்தியமையே இதற்கு காரணமாகும்.

இதற்கு முன்பாக கார்ல்சனை சில முறை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தாலும், ’கிளசிக்கல் கேம்’ என்று சொல்லப்படும் செஸ் விளையாட்டின் சிறப்பு பகுதியில் முதல் முறையாக கார்ல்சனுக்கு எதிராக பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார்.

நோர்வே நாட்டில் நேற்று இடம்பெற்ற செஸ் கிளசிக்கல் கேம் தொடரானது பெரும் எதிர்பார்ப்பு மிக்க போட்டியாக அமைந்திருந்தது.

செஸ் விளையாட்டில் கிளசிக்கல் கேம் என்பது மற்ற விளையாட்டு முறைகளை விட அதிக நேரம் எடுத்துக் விளையாடும் முறையாகும்.

இதற்கு முன்பாக ரேபிட், பிளிட்ஸ் போன்ற செஸ் ஆட்ட முறையில் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் இடம்பெற்ற ஆட்டத்தில், வெள்ளை காய்களுடன் கார்ல்சனை எதிர்த்த அவர் போட்டியை தன்வசப்படுத்தியிருந்தார்.

இந்த தோல்வியானது கார்ல்சனை 5ஆவது இடத்திற்கு பின்தள்ளியுள்ளது.

உலக தமிழ் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் செஸ் விளையாட்டு என கூறும்போது கடந்த காலங்களில் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்தின் பெயர் நினைவுக்கு வருவதுண்டு.

ஆனால் தற்போது இளம் வீரரான பிரக் என்றழைக்கப்படும் பிரக்ஞானந்தா சர்வதேசத்தின் பேசுபொருளாகியுள்ளார்.

18 வயதான பிரக்ஞானந்தா, சமீபத்தில் அசர்பைஜானில் நடைபெற்ற செஸ் உலக கோப்பை போட்டியில் பங்கேற்றதன் மூலம், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் உலகின் இளம் வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

2002ம் ஆண்டில் விஸ்வநாதன் ஆனந்த் உலக கோப்பையை வென்ற பிறகு, இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் பங்கு பெற்ற இந்தியர் மற்றும் தமிழ் வீரர் என்ற பெருமையையும் தன்வசப்படுத்தியிருந்தார்.

பிரக்ஞானந்தா தனது பத்தாவது வயதில் செஸ் வரலாற்றில், இண்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்ற இளம் வீரரானார். இரண்டு ஆண்டுகள் கழித்து 2018ம் ஆண்டில், உலகின் அப்போதைய இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.

கனடாவில் இந்தாண்டு நடைபெற்ற கேண்டிடேட்ஸ் டோர்னமண்ட் போட்டியில் பங்கேற்ற மூன்றாவது இளம் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.

சென்னை பாடி பகுதியில் பிறந்த பிரக்ஞானந்தா எளிமையான குடும்ப பின்னணி கொண்டவராவார்.

ஒரு ஊடக சந்திப்பில் கடன் வாங்கியே போட்டிகளுக்கு தன் மகனை அனுப்பவேண்டி இருந்தமை தொடர்பில் அவரது தாய் வெளிப்படையாக பேசியிருந்தார்.

தனது சகோதரியான வைஷாலி செஸ் விளையாடுவதினை பார்த்து ஆர்வம் கொண்ட அவர் செஸ் விளையாட ஆரம்பித்துள்ளார்.

உலக கோப்பை போட்டியில் அவர் கார்ல்சனிடம் தோல்வியை தழுவினாலும், அவரது அசாத்திய ஆட்டத்தால் பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் செஸ் குறித்த ஆர்வத்தை தூண்டியுள்ளார்.

விஸ்வநாதன் ஆனந்த் செஸ் போட்டியில் வெற்றி பெற்ற போது, செஸ் குறித்த பேச்சும் முக்கியத்துவமும் எப்படி அதிகரித்ததோ அதேபோன்ற நிலை தற்போது உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.