D
இலங்கையின் (Sri Lanka) பாலின உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக நிர்வாகம் போன்ற திட்டங்களுக்காக பல்வேறு வெளிநாட்டு அமைப்புக்களால் நிதியளிக்கப்பட்ட பல முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனங்களை (NGO) கண்காணிக்க புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தொண்டு நிறுவனங்களுக்கு கிடைத்த நிதித்தொகைகள் தொடர்பில் உரிய கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த சட்டம் கொண்டு வரப்படவுள்ளது..
இலங்கையின் தன்னார்வு தொண்டு செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டு 33 பில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது
இந்நிலையில், நிறுவன பதிவாளரின் கீழ் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ள முக்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பெரும் தொகை நிதி கிடைத்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.
இதனிடையே முன்மொழியப்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் பதிவு மற்றும் மேற்பார்வை யோசனை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கப்படுவதற்கான இறுதி கட்டத்தில் உள்ளது.
இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அரசு சாரா நிறுவனங்களின் செலவுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து முறையான சரிபார்ப்பை மேற்கொள்ளமுடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னணி அரச சார்பற்ற நிறுவனங்கள் கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திர சமூகத்திடம் முறையிட்டுள்ளன.
இதனையடுத்தே அந்த சட்டத்தில் இணைக்கப்பட வேண்டிய சில அவதானிப்புகளை அமெரிக்க வெளியுறவுத்துறையும் இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
அமெரிக்காவின் இந்த அவதானிப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பிற சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து, புதிய சட்டமூலத்தை உருவாக்குவதற்கான பரிசீலனைக்காக சட்ட வரைவாளர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.