D
இந்தியாவில் (India) 1990ஆம் ஆண்டு முதல் வசிப்பதாகக் கூறப்படும் இலங்கை அகதி ஒருவர் இந்தியக் குடியுரிமை கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை பரிசீலித்து, அவரது மனுவை ஏற்று அல்லது நிராகரித்து உத்தரவை நிறைவேற்றுமாறு இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கஜேந்திரன் (Gajendiran) என்ற இந்த இலங்கை அகதி தாக்கல் செய்த குடியுரிமை விண்ணப்பத்தின் மீது 12 வாரங்களுக்குள், விண்ணப்பதாரரிடமிருந்து தேவையான அனைத்து விளக்கங்களையும் பெற்று, பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி நியாயமான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி அனிதா சுமந்த் (Anita Sumanth) உத்தரவிட்டுள்ளார்.
2017ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள தனது குடியுரிமை விண்ணப்பத்தை விரைவுபடுத்துமாறு இந்திய மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது புதுச்சேரியில் வசிக்கும் மனுதாரர், விழுப்புரத்தில் உள்ள கீழ் புதுப்பேட்டை மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்த காலத்தில் கணிதத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். இவர் 2008ஆம் ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதியன்று ஒரு இந்தியரை திருமணம் செய்துள்ளார்,
இப்போது அவர் ஒன்பது வயது குழந்தைக்கு தந்தையாக உள்ளார் என்று மனுதாரரின் சட்டத்தரணி எல். ரோமியோ ராய் அல்ஃபிரட் மன்றில் தெரிவித்துள்ளார்.
எனினும் மத்திய அரசின் மூத்த சட்டத்தரணி ஜி.பாபு, மனுதாரரின் விண்ணப்பத்தில் உள்ள முரண்பாடுகளை எடுத்துரைத்தார்.
மனுதாரர் தன்னை கஜேந்திரன் என்று கூறும்போது, தமிழக அரசின் மறுவாழ்வுத் துறையால் வழங்கப்பட்ட அகதிச் சான்றிதழில் அவர் ஆர்.கஜேந்திரகுமார் என அடையாளம் காட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் இரண்டு தரப்பினரிதும் சமர்ப்பிப்புகளை பதிவு செய்த நீதிபதி குடியுரிமை விண்ணப்பத்தை பரிசீலிக்கும் போது பெயரில் உள்ள முரண்பாடுகள் உட்பட அனைத்து விளக்கங்களையும் மத்திய உள்துறை அமைச்சகம் பெற்று உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டுள்ளார்.