D
இலங்கை கிரிக்கெட் அணியின் இரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ கடுமையாக சாடியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் அவர் இவ்வாறு கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
தற்பொழுது தொலைக்காட்சியில் தோன்றி இலங்கை அணியை விமர்சனம் செய்யும் முன்னாள் வீரர்கள் திறமையற்றவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பொறுப்புக்களை வழங்கிய போது அதனை ஏற்றுக்கொள்ளாது ஒளிந்து ஓடியவர்கள், இன்று தொலைக்காட்சியில் தோன்றி பண்டிதர்கள் போல் பேசுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான மார்வன் அத்தபத்து மற்றும் திலகரத்ன தில்ஷான் ஆகியோரை அவர் இவ்வாறு மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
ஒரு கிரிக்கெட் வீரரை இப்பொழுது நீங்கள் ஓய்வெடுங்கள் என மக்கள் கூறியதாகவும், மற்றவர் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் பூஜ்ய ஓட்டங்களை பெற்றவர் இன்று விமர்சனங்களை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணி சிறந்த அணி எனவும், இன்னும் கொஞ்சம் ஓட்டங்களை எடுத்து இருந்தால் தோல்வியடைந்த இரண்டு போட்டிகளிலும் வென்று இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணியை விமர்சனம் செய்யும் இரசிகர்கள் எவ்வித தகுதியும் அற்றவர்கள் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிரிக்கெட் விளையாடாதவர்கள் இன்று கிரிக்கெட் பற்றி விமர்சனம் செய்வதாகவும், இலங்கை கிரிக்கெட் அணி தெரிவு விவகாரத்தில் தாம் எந்த ஒரு தலையீட்டையும் இதுவரை மேற்கொண்டதில்லை எனவும் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா தேசிய அணியினால் நலன்களைப் பெற்றுக்கொண்ட முன்னாள் வீரர்கள் சிலர் இன்று சக வீரர்களை கடுமையாக சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்து வருவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
தற்பொழுது அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் நடைபெற்று வரும் ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் இலங்கை தேசிய அணி தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளிடம் தோல்வியை தழுவியிருந்தது.
இந்த தோல்வி காரணமாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு இலங்கை அணிக்கு மிகவும் குறைவாக காணப்படுகின்றது.
இவ்வாறான ஒரு பின்னணியில் இலங்கை கிரிக்கெட் இரசிகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இலங்கை அணியின் சில தீர்மானங்கள் தொடர்பில் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் ஹரீன், இலங்கை இரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கடுமையாக சாடியுள்ளார்.