Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

தேரர் ஒருவரின் விடுதலை பல இலட்சம் முஸ்லிம் சமூகத்தினரின் கையில்!

0 2

ஞானசார தேரருக்கு மன்னிப்புக் கொடுக்கும் விவகாரமானது நாட்டின் சட்டத்தோடும் உயர் நீதிமன்றத்தோடும் நேரடியாக தொடர்புற்றிருக்கும் நிலையில் முஸ்லிம் சமூகத்துடனும் தொடர்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே நாட்டின் ஒட்டுமொத்த முஸ்லிம்களதும் கருத்தைப் பெறாமல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவோ, முஸ்லிம் சிவில் அமைப்புக்களோ, அரசியல் பிரமுகர்களோ இது தொடர்பில் எந்தவித நிலைப்பாடுகளையும் எடுக்க முடியாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சட்டத்துறை வல்லுநர்கள், அரசியல் பிரமுகர்கள், துறைசார்ந்தவர்கள், ஆலிம்கள் ஆகியோரிடையிலான விஷேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தெஹிவளை பெரிய ஜும்மா பள்ளிவாசலில் அதன் நிர்வாகத்தினரின் பங்களிப்புடன் நடைபெற்றது.

பொதுவாக சமூகம் சார் விடயங்களில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவானது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது தேவையேற்படும் பட்சத்தில் இவ்வாறு சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் துறைசார்ந்தவர்களை அழைத்து, கலந்தாலோசிக்கும் வழக்கத்தின் அடிப்படையிலேயே இச்சந்திப்பும் நடைபெற்றுள்ளது.

கொழும்பு உயர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக நிரூபனமாகி, நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது சிறையிலிருக்கும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பைப் பெற்றுக்கொடுக்கும் விவகாரத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுபலசேனா அமைப்பினால் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்தே குறித்த விடயத்தினை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டு, ஞானசார தேரருக்கு மன்னிப்பு கொடுக்கும் அதிகாரம் அனைத்து முஸ்லிம் சமூகத்துடன் தொடர்புடையது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.