D
அத்துருகிரியில் அண்மையில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளரின் மனைவி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், அவரது உடல்நிலையை விசாரிக்க உறவினர்கள் யாரும் வருவதில்லை என்றும், இதனால் அவர் சிகிச்சையின் போது பல சிரமங்களை சந்திக்க நேரிட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறக்கச் சென்ற வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் மேலும் ஒருவர் உயிரிழந்தனர்.
மேலும், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பாடகி சுஜீவா மற்றும் பச்சை குத்தும் நிலைய உரிமையாளரின் மனைவி, கிளப் வசந்தவின் மனைவி ஆகியோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், துப்பாக்கிச்சூடு நடந்தபோது, பச்சை குத்தும் நிலையத்தின் எதிரில் இருந்த உரிமையாளரின் சகோதரனிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிளப் வசந்த அந்த இடத்திற்கு வந்ததில் இருந்து காணொளி தொழில்நுட்பம் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வழிமுறைகள் மூலமாகவோ தகவல்களை தெரிவித்தாரா என்பது குறித்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
கிளப் வசந்த மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சிசிடிவி காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில், பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் வாசலில் மறைந்திருந்தமை குறித்தும் விசாரணை அதிகாரிகளினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கிளப் வசந்தவும் பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளரும் ஒருவருக்கொருவர் கடுமையான இடைவெளியைக் கடைப்பிடிப்பது குறித்தும் விசாரணை அதிகாரிகள் தங்கள் கவனத்தை செலுத்தியுள்ளனர்.
இதேவேளை, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கிளப் வசந்தவின் மனைவியின் உடல் நிலை இன்னும் மோசமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அத்துருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்ட கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்தவின் படுகொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் நாட்டை விட்டு வெளியேறியதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவரவில்லை என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான பச்சை குத்தும் நிலைய உரிமையாளர் துலானின் தாயார் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர் என்றும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.