D
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
எனினும் இந்த சின்னத்திற்கு களுத்துறை மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயாதீன குழுவொன்று உரிமை கோரியுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் நான்கு உள்ளுராட்சி சபைகளுக்காக, உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயாதீன குழுவொன்றுக்கு எரிவாயு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டிருந்தது.
தமது சின்னத்தை ஜனாதிபதி தேர்தலில் வழங்கப்படக்கூடாது எனக்கூறி குறித்த சுயாதீன குழு நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
எனினும், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என்பனவற்றுக்கு தனித்தனியாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எனவே எரிவாயு சிலிண்டர் சின்னம் தொடர்பில் பிரச்சினைகள் எழாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலுக்கு தேர்தல் சின்னங்கள் மாறுபடும் எனவும், இதனால் ஜனாதிபதி தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னம் தொடர்பில் சர்ச்சை ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாவட்டத்தில் போட்டியிடும் குழுவொன்று தெரிவு செய்யும் அதே சின்னத்தை வேறும் மாவட்டமொன்றில் மற்றுமோரு குழு தெரிவு செய்து போட்டியிட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட சின்னங்களில் ஒன்றையே தெரிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.