D
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் பிரசார செலவு அறிக்கையில் சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு நன்கொடைகள் அல்லது பங்களிப்புகளை வழங்கிய நபர்களின் TIN எண் (வரி செலுத்துவோர் அடையாள எண்) அல்லது உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கத்தை குறிப்பிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, தேர்தல் முடிவுகள் வெளியான 21 நாட்களுக்குள், சம்பந்தப்பட்ட வேட்பாளர்களின் செலவு அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டத்தின் பிரகாரம், தேர்தல் பிரசார செலவுகள் தொடர்பில் பொய்யான தகவல்களை சமர்ப்பித்துள்ளமை நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக 109 ரூபாய் செலவழிக்க முடியும்.
இதன்படி, நாட்டில் உள்ள 17,140,354 வாக்காளர்களுக்கு ஒரு வேட்பாளர் 1,868,298,586 ரூபாவை செலவிட முடியும். 60 சதவீதத்தை (ரூ. 1,120,979,151.60) வேட்பாளரே ஏற்க வேண்டும், ஏனைய 40 சதவீதத்தை (ரூ. 747,319,434.40) வேட்பாளரின் கட்சி செயலாளர் அல்லது வாக்காளர் செலவிடலாம்.
ஒரு வேட்பாளர் பிரசாரப் பொருட்கள் வடிவில் நன்கொடைகள் அல்லது உதவிகளைப் பெற்றிருந்தால், அதன் மதிப்பு தொகை, கடன்கள், முன்பணங்கள் அல்லது வைப்புத்தொகை என்பனவற்றை கணக்குப் பிரசாரச் செலவின அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.
அத்துடன், தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியில் உரிய நன்கொடை அல்லது உதவிகளை வழங்கிய நபர்களின் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம் போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.