D
கொழும்பு, இரத்மலானை பகுதியிலுள்ள வீடொன்றிற்கு நேற்று அதிகாலை இரகசியமாக நுழைந்த தந்தையொருவர், உறங்கிக் கொண்டிருந்த மகனை வெட்டிக் கொலை செய்ததுடன், மனைவியை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாளிகாவ வீதியிலுள்ள வீடொன்றில் வசித்து வந்த 26 வயதுடைய லஹிரு லக்ஷான் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபரின் 54 வயது மனைவி பலத்த வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான தந்தை வேறு பகுதியில் வசித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் மணிக்கணக்கில் வீட்டின் அருகாமையில் உள்ள முட்புதரில் மறைந்திருந்து பாட்டி வீட்டை விட்டு வெளியே சென்றவுடன் வீட்டுக்குள் நுழைந்து மகனை கொன்று மனைவியையும் கொடூரமாக வெட்டிய பின்னர் தப்பியோடியுள்ளார்.
சத்தம் கேட்டு அயலவர்கள் வீட்டிற்குள் வந்த நிலையில் பலத்த காயமடைந்த தாயும் மகனும் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் எனினும் மகன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தையடுத்து சந்தேக நபரான தந்தை பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் தந்தையை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.