D
நான் இந்த தேர்தலில் இருந்து விலகி சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக தமிழரசுக் கட்சியில் சிலர் துண்டு பிரசுரங்களை வெளியிட்டு அடாவடித்தனமாக நடந்துகொள்கின்றனர் என தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்றயதினம் (21) திட்டமிட்டபடி இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்ற நிலையில் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் அம்பிளாந்துறை கலைமகள் வித்தியாலயத்தில் வாக்களித்தார்.
இவ்வாறு தனது வாக்கைப் பதிவு செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சில தீய சக்திகள் சில துண்டு பிரசுரங்களையும் அச்சிட்டு வெளியிட்டு இருக்கின்றார்கள்.
குறிப்பாக நான் அங்கம் வகிக்கின்ற இலங்கை தமிழரசு கட்சியிலே சேர்ந்த ஒரு சிலர் இந்த அடாவடித்தனமாக நான் இந்த தேர்தலில் இருந்து விலகி சஜித் பிரமதாசவை ஆதரிப்பதாக ஒரு துண்டு பிரசுரமும், இன்னும் ஒரு துண்டு பிரசுரம் சஜித் பிரேமதாச அவர்களுக்கு முதலாம் இலக்கத்தையும் இரண்டாம் இலக்கத்தை எனது சங்கு சின்னத்துக்கு போடுமாறு அந்த துண்டு பிரசுரத்தில் அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றார்கள்.
என்னை ஆதரிப்பவர்கள் சங்கு சிந்தனைத்துக்கும் மாத்திரமே வாக்களிக்க வேண்டும் நான் வேறு எந்த சிங்கள பேரினவாதிகளையும் என்னுடன் சேர்த்து அந்த பிரசாரம் செய்வதை வன்மையாக கண்டிக்கின்றேன் துண்டு பிரசுரம் அச்சிட்டு வெளியிட்டவர்களுக்கு வாக்குப் பலமோ ஆதரவோ இல்லை என்பது எனக்கு தெரியும்.
ஆனாலும் ஆதரவு பெருகி இருக்கின்ற தமிழ் பொது வேட்பாளராகிய என்னை மிகவும் கேவலப்படுத்துகின்ற விதத்திலும் எனது செல்வாக்கை குறைக்கின்ற விதத்திலும் இவ்வாறான விளம்பரங்கள் இவ்வாறான துண்டு பிரசுரங்கள் தொடர்ச்சியாக வருவதை எந்த ஒரு மக்களும் நம்ப வேண்டாம்.
இந்த துண்டு பிரசுரம் போடுபவர்கள் அனாமதேய பிரசாரங்களை மேற்கொண்டுபவர்களுக்கு தக்க பாடங்களை வருகின்ற தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
எனவே வாக்களித்துவிட்டு தமிழ் உறவுகள் அனைவரும் வீடுகளிலேயே இருந்து முடிவை பார்க்குமாறும் நான் தயவாக கேட்டுக் கொள்கின்றேன் அத்தோடு எந்தவித தீய நடவடிக்கைகளிலும் பிரசாரங்களிலும் சச்சரவுகள் இல்லாமல் அமைதியாகச் சென்று தேர்தல் முடிவுகளை அவதானிக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.