D
அவுஸ்திரேலியா(Australia) அரசாங்கம் நேற்று(27) புதுப்பித்த இலங்கைக்கான தனது பயண ஆலோசனைகளில், சில எச்சரிக்கைகளை சேர்த்துள்ளது.
இலங்கைக்கு பயணிக்கும் போது ‘அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு’ தனது நாட்டு மக்களுக்கு அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளது, அங்கு இலங்கை முழுவதும் பொது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறலாம் மற்றும் வன்முறையாக மாறலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்படும் பகுதிகளைத் தவிர்க்கவும் என்று புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஆர்ப்பாட்டங்கள் போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்தும்.
இதன்போது, உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுமாறும், புதுப்பிப்புகளுக்கு ஊடகங்களின் தகவல்களை கவனிக்குமாறும் அந்த ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதியின்மை காலங்களில் பாதுகாப்பாக இருக்க, எதிர்ப்புகள் மற்றும் பெரிய கூட்டங்களை தவிர்க்குமாறு ஆலோசனையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், பொது அவசரநிலைகள் மற்றும் குறுகிய அறிவிப்பில் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்படும் பட்சத்தில் உங்களுடன் தொடர்புடைய பயண மற்றும் அடையாள ஆவணங்களை உடன் வைத்திருக்குமாறு பயண ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடப்பதற்கான அபாயத்தை இந்த ஆலோசனை எடுத்துக்காட்டியுள்ளது.
குறிப்பாக வெளிநாட்டினர் அல்லது சுற்றுலாப் பயணிகளின் முக்கிய பகுதிகளை அவர்கள் குறிவைக்கலாம் என்று ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, சுகாதாரம், உள்ளூர் சட்டங்கள், பயணம் மற்றும் உள்ளூர் தொடர்புகள் உட்பட இலங்கையில் பயணம் செய்வது தொடர்பான பல காரணிகள் குறித்தும் பயண ஆலோசனை அவுஸ்திரேலியர்களை எச்சரித்துள்ளது.
கொழும்பில்(Colombo) மருத்துவச் சேவைகள் அவுஸ்திரேலியாவின் தரத்தில் இல்லையென்றும், தலைநகருக்கு வெளியே அவை மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன் மனநலச் சேவைகள் வரையறுக்கப்பட்டவை. அவை அவுஸ்திரேலியாவின் தரத்திற்குக் குறைவாகவே உள்ளன.
இலங்கையில் டெங்கு காய்ச்சல் அபாயம் காணப்படுகின்றமையினால் நுளம்பு விரட்டியை பயன்படுத்துமாறும், காய்ச்சல் இருந்தால் மருத்துவ உதவியை நாடுமாறும், பயண ஆலோசனையில் கூறப்பட்டுள்ளது.