D
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக கூறி இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் இதுவரை இலங்கை அதிகாரிகளுடன் எந்தத் தகவலையும் பரிமாறவில்லை என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளிடம் விசாரணைகளுக்கு உதவி கேட்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
முப்படைகளின் புலனாய்வுப் பிரிவினர், அரச புலனாய்வுப் பிரிவு, பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியவற்றின் புலனாய்வுப் பிரிவினரால் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், குறித்த நான்கு பேரும், போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத தங்க கடத்தலை தவிர பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாகத் தெரியவரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது, இந்திய புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் இலங்கைக்கு வந்து பல மாதங்களாக விசாரணை நடத்தியும், இம்முறை அவ்வாறான விசாரணைக்கான தகவல்களைப் பரிமாறிக் கொள்வது பற்றி பேசவில்லை என கூறப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் காலத்தில் இதுபோன்ற தலைப்புகளை முன்வைத்து பெரும் பிரசார திட்டங்கள் கடந்த காலங்களிலும் முன்னெடுத்தாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் உள்ளதாக வெளியான தகவலை அடுத்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் என்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.