D
முச்சக்கரவண்டிகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கண்டி மாவட்டத்தில் 91,615 பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகள் சேவையில் உள்ளன. போக்குவரத்து சட்டத்தின் மூலம் விதிக்கப்பட்டுள்ள முறைமைக்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்தப்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அறவிடப்படும் பணத்திற்கு அதில் பயணிப்போர் பற்றுச் சீட்டு கோருவார்களானால் பற்றுச் சீட்டு வழங்கப்பட வேண்டும். அது தற்போது முறையாக நடைமுறையில் இல்லை. சட்டம் திருத்தப்படும்போது இந்த அனைத்து விடயங்கள் அதில் உள்ளடக்கப்படும்.
அதேபோன்று, பயணிகள் முச்சக்கரவண்டியில் செல்லும்போது சாரதியின் புகைப்படம், முச்சக்கர வண்டியின் இலக்கம் உட்பட விபரங்கள் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளதைப் போன்று காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு உரிய அனுமதி கிடைத்ததும் ஓரிரு மாதங்களில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.