D
பிரான்சில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் பாதாள உலகக் கும்பலின் தலைவன் கஞ்சிபானை இம்ரானை கைது செய்து இலங்கைக்கு அழைத்து வர பிரான்ஸ் அரசாங்கத்தின் ஆதரவைப் பெறுமாறு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் அறிவித்துள்ளதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானை இம்ரானுக்கு எதிராக சர்வதேச பொலிஸார் ஏற்கனவே சிவப்பு பிடியாணை உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.
கஞ்சிபானை இம்ரானைத் தவிர, பிரான்சில் பதுங்கியிருக்கும் குடு அஞ்சு, ரொட்டம்பே அமில உள்ளிட்ட பல பாதாள உலக கும்பல் தலைவர்களை இலங்கைக்கு அழைத்து வரும் வேலைத்திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் வெளிவிவகார அமைச்சு, சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பன தலையிட்டு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருடன் விரிவான கலந்துரையாடலை நடத்தி அதன் மூலம் பிரான்ஸ் அரசாங்கத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 8 ஆம் திகதி கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா அத்துருகிரியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கஞ்சிபானை இம்ரான் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.