D
இந்திய மத்திய அரசாங்கத்தின் பாதீடு, தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என தமிழ் நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் (M. K. Stalin)விமர்சித்துள்ளார்.
அத்துடன், மத்திய அரசாங்கத்தின் பாதீடு, ஏதோ கூட்டணி ஒப்பந்தம் போன்று உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான பாதீட்டை, இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த பாதீட்டில் பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம், நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பாதீட்டில் தமிழ்நாடு என்ற சொல்லே இடம்பெறவில்லை.
முன்னதாக 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ தொடருந்து திட்டத்துக்கான நிதியை விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.
எனினும் அது தொடர்பில் எவ்வித அறிவிப்புக்களும் வெளியாகவில்லை. மதுரை, கோவை மெட்ரோ தொடர்பாக எந்த தகவலும் இல்லை.
இதன்படி, மத்திய அரசாங்கத்தின் பாதீட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் வழமையாக தமது பாதீட்டு உரையில் திருக்குறள் மற்றும் புறநானூறு போன்றவற்றை மேற்கோள் காட்டும் நிர்மலா சீத்தாராமன், இந்த பாதீட்டில் அதை எதனையும் தொடவில்லை என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இதேவேளை இந்திய பாதீட்டின்படி, தங்கம், வெள்ளி மற்றும் கைடக்கத் தொலைபேசிகளின் விலையில் குறைவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.