D
ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்ற நிலையில் அவரை அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இத்திருமணத்திற்கு இந்திய தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை வந்தனர்.
தமிழ் பிரபலங்களான ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பம், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, அட்லீ மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதோடு, கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மேலும், இந்த திருமணத்தில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டார். அம்பானி குடும்பத்தின் நலனுக்காகவே பிரதமர் நரேந்திர மோடி செயல்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவர் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
அந்தவகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “இத்தனை காலம் அம்பானியையும், அதானியையும் திமுகவினர் எப்படியெல்லாம் திட்டினார்கள். அவர்களை பற்றி தவறாக பேசி அரசியல் செய்தார்கள்.
ஆனால், இன்று அம்பானி வீட்டு திருமணத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். ஸ்டாலினின் மருமகன், அதானியுடன் சந்தித்து பேசியுள்ளார்.
இந்த இரண்டு நிகழ்வுகளும் ஒரே வாரத்தில் நடக்கிறது. இதையெல்லாம் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்” என்றார்.