D
சங்கு சின்னத்தின் மீது அச்சப்பட்ட எதிர்த்தரப்பினர் எங்கள் மீது பொய்யான அவதூறுகளைப் பரப்புகின்றனர் என ரெலோ அமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் குருசாமி சுரேந்திரன் (Surendran Guruswamy) தெரிவித்துள்ளார்.
எங்களுக்குள்ளே இருக்கக்கின்ற, கையூட்டுக்கு மயங்கக்கூடிய, சொற்படிவித்தைகளுக்கு மயங்கக்கூடிய, எதற்கும் விலை போகக்கூடிய அயோக்கியர்களை இனம் கண்டு அவர்களுடாக எங்களுடைய வெற்றி வேட்பாளர்களுக்கு எதிராக சேறு பூசிக்கொண்டு இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அராலியில் நேற்று இரவு (09) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான செயற்பாடுகளுக்கு பின்னணியிலே பல நிதி மோசடியில் ஈடுபட்டவர்களும், பல குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களும், அவர்களை காப்பாற்றுவதற்காக சட்டத்தை பயன்படுத்துபவர்களும் இணைந்து இந்த அவதூறுகளை பரப்புவதில் முன்னணி வகிக்கின்றார்கள்.
காகம் சங்கை திரும்பிப் பார்த்து கறுப்பு என்று சொல்வது போல குற்றவாளிகளாக சிறையிலே மூன்று வருடங்களுக்கு மேலே தனது வாழ்க்கையை கழித்தவர்களும், பல குற்றங்களை புரிந்து கொண்டிருப்பவர்களும், தாங்கள் அடுத்தவர்களை குற்றவாளியாக்கிவிட்டால் தாங்கள் சுற்றவாளியாகி விடுவார்கள் என்று கற்பனையிலே மற்றவர்கள் மீது குறை கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.
தென் இலங்கையின் சதித்திட்டத்திற்கும், கையூட்டுக்களுக்கு மயங்கியவர்கள் போன்றோரை நீங்கள் இனம் கண்டு, உங்களுடைய வாக்குகளை சரியானவர்களுக்கு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.